இந்தியாவின் முக்கியமான அரசு பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயத்தை வெளிச்சம் போட்டு காட்டும் மிக முக்கியமான ஆவணப்படம். கடைக்கோடியில் இருக்கும் கிராமங்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் அவசியத்தையும் பலன்களையும் முக்கியமாக வளர்ச்சியையும் எப்படி கொண்டு சேர்த்தது என்பது பற்றிய விரிவான ஆவணப்படம். மிக முக்கியமாக சிறுகுறு கடைகளின் நன்மைகளைப்பற்றியும், தனியார் சிறுகுறு கடன்களால் ஏற்படும் சிக்கல்களை பற்றியும் விளக்கியுள்ளது.
ஆவணப்பட லின்க் : https://www.youtube.com/watch?v=YMhIj6ULk1k
ஆவணப்படம் குறித்த Bank Workers Unity விமர்சனம்
“I began to feel that the drama of the truth that is in the moment and in the past is richer and more interesting than the drama of Hollywood movies. So I began looking at documentary films.” – Ken Burns.
ஹாலிவுட் படக் கதைகளை விட, நிகழ்கால, கடந்த கால உண்மைகளின் கதைகள் செழுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதாக நான் உணர ஆரம்பித்தேன். அதனால் நான் ஆவணப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன் – கென் பர்ன்ஸ்.
ஒரு திரைப்படம் என்பது முழுவதும் புனைவாக இருக்கலாம் அல்லது உண்மை சம்பவங்களை மேற்கோடிடும் அல்லது அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவாக இருக்கலாம். புனைவு இல்லாத திரைப்படம் ஒன்று இருக்க முடியாது.
ஆனால், ஒரு ஆவணத் திரைப்படம் (Documentary film) என்பது நடந்த, நடக்கும் விவரங்களை, சூழல்களை, சம்பவங்களை, உண்மைகளை, புனைவுகள் இல்லாமல் உண்மைக்கு மிக அருகில் இருந்து கொண்டு அவற்றை ஆவணப்படுத்த முயலும் ஒரு முயற்சி. ஆக ஆவணப்படம் அல்லது விவரணத் திரைப்படம் என்பது திரைப்படத்திற்கு மாறாக புனைவுகள் அற்றதாக இருக்கும்.
சூழல்கள் மற்றும் விவரங்கள் இடத்திற்கு இடம் மாறு படலாம். காலத்திற்கு காலம் மாறுபடலாம். அந்தந்த இடம், காலம் ஆகியவற்றின் நிகழ்வுகளை மற்றும் விவரங்களை அப்படியே வெளிக் கொணர்வதுதான் ஆவணப்படத்தின் வெற்றி.
ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டுமே விவரப் படுத்திய ஆவணப்பட முயற்சிகள் பின்னர் தொடர் நிகழ்வுகளை ஆவணப்படுத்த ஆரம்பித்தன என்பார்கள். இத்தகைய முயற்சிகள் கருத்தாக்கங்களை உருவாக்க, வலுப்படுத்த உதவுகின்றன. ஆவணப்படங்களின் இந்தத் தனிச் சிறப்பை உணர்ந்த சில தற்குறிகள் தங்கள் சுயலாபத்திற்காக வரலாற்றைத் திரிக்க இந்த கலையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. அது கிடக்கட்டும். அதை பின்னால் அலசலாம்.
இந்திய வங்கிகள் பற்றி, வங்கிச் சேவை பற்றி, வங்கி வாடிக்கையாளர்களின் நிலை பற்றி ஆவணப்படுத்தும் முயற்சி எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றே தெரிகிறது. முதல் முறையாக, வங்கிச் சேவை, வாடிக்கையாளர் சேவை பற்றிய பல உண்மை விவரங்களை, நிகழ்வுகளைச் சேகரித்து அற்புதமாகத் தொகுத்து இடை இசையோடு திரைக்கலை வடிவில் தொகுத்து வழங்கியிருக்கும் அற்புதமான ஆவணப்பட முயற்சிதான் “THE UNBANKING – Hidden Cost of privatising PSU Banks” (வங்கி நிர்மூலம் – வங்கிகள் தனியார்மயமாக்கலின் பாதகங்கள்) என்கிற ஆவணப்படம்.
கடைக்கோடி வாடிக்கையாளர்கள் வங்கி பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவர்களின் தேவை என்ன? அவர்களின் வாழ்க்கை, பொருளாதாரத் தரம் உயர என்ன செய்ய வேண்டும்? இருந்தும், நாட்டில் நடைமுறையில் என்ன நடக்கிறது? பொதுத் துறை வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எப்படி நன்மை செய்கின்றன? இப்படி பற்பல கேள்விகளுக்கு விடை காண “காம்ரேட் டாக்கீஸ்” மற்றும் பிஇஎஃப்ஐ தமிழ்நாடு (BEFI – TN) இணைந்து நேர்மையாக செய்த முயற்சியின் விளைவுதான் இந்த “The Unbanking – வங்கி நிர்மூலம்” என்கிற ஆவணப்படம்.
இவர்களின் இந்த சீரிய முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. இது போல இன்னும் பல நேர்மையான, தரமான படைப்புகளை இவர்கள் உருவாக்க வேண்டும்.
ஆவணப்படம் குறித்த விகடன் செய்தி: தனியார்மயமாகும் வங்கிகள்… சுரண்டப்படும் நடுத்தர மக்கள் பணம்…