பத்து வருடங்களில் அதானியின் அசுர வளர்ச்சி சாத்தியமானது எப்படி என்பதை தக்க தரவுகளுடன்,மூத்த பத்திரிகையாளர்கள்,பங்கு சந்தை நிபுணர்கள்,பொருளாதார பேராசிரியர்கள் துணையுடன் அலசி முடிந்த வரையில் எளிமையாக விளக்க முயற்சி செய்து தயாரித்திருக்கும் ஆவணப்படத்தை தோழர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார்.

The Nexus ஆவணப்படம் தொடர்பான Bank Workers Unity இணையதளத்தின் விமர்சனம்
சாசனப்படி சகலரும் சமம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது இந்தியர்களுக்கு காலனிய நுகத்தடிச் சுரண்டலில் இருந்து விடுதலை என்ற மகிழ்ச்சியுடன் கூட பற்பல கனவுகளும் இருந்தன. உழுவதற்கு நிலம், சத்தான உணவு, நியாயமான ஊதியம், வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் சாதி-வகுப்புவாத வெறுப்பு போன்ற தீமைகள் அற்ற, ஜனநாயக உரிமைகளைக் காக்கும் சமூகம் ஆகியவற்றை புதிய அரசு உத்தரவாதப் படுத்தும் என மக்கள் விரும்பினர், நம்பினர். மக்களைப் போலவே, தொழிலதிபர்களும் தங்களின் வளம் பெருக்கும் முன்னேற்றத்திற்கு புதிய அரசு பெரிதும் உதவ வேண்டும் என விரும்பினர். இந்திய அரசியல் சாசனம் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை அனைவருக்கும் உறுதிசெய்கிறது. மேலும், படிநிலை & வாய்ப்பு சமத்துவத்தை (equality of status and opportunity) உறுதியாக முன்மொழிகிறது.
சுதந்திரத்தின் பலன்
ஆனால், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கழிந்த பின்னும் நாட்டில் நிலை என்ன? 2021இன் NITI ஆயோக் அறிக்கைப்படி இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் 32.75% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, இந்தியாவின் 49 சதவீத செல்வத்தை 1 சதவீத பணக்காரர்கள் தங்கள் வசம் சுருட்டி வைத்துள்ளனர். 50 சதவீத ஏழைகள் வசம் 3 சதவிகிதம் சொத்து மட்டுமே உள்ளது. எண்பது கோடி மக்கள் இலவச ரேஷனை நம்பி உள்ளனர். இந்த நிலை எதைக் காட்டுகிறது? பணக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுதான் என்ன?
1944 பம்பாய் திட்டம்
1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் வெகு மக்கள் பெருவாரியாக கலந்து கொண்டதைப் பார்த்த பிறகு இந்திய பெரும் தொழிலதிபர்கள் கலக்கமடைந்தனர். “இன்று மகாத்மா காந்தியால் இதைத் தடுக்க முடியும், ஆனால் பிற்காலத்தில் அது அவர்களின் கைகளையும் விட்டுப் போகலாம், மக்கள் இயக்கத்தை யாராலும் அடக்க முடியாது” எனக் கருதினர்.
“வருமானம் மற்றும் செல்வம் மறு பகிர்வு செய்வதற்கான அரசியல் கோரிக்கைகளை எதிர்கொண்டால், அரசாங்கம் (சுதந்திர இந்தியாவின் வருங்கால அரசாங்கம் என்று அர்த்தம்) போருக்குப் பிறகு அவசர அவசரமாக ஜனரஞ்சக பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கலாம். தங்களின் தனிச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படலாம்” எனவும் அவர்கள் அஞ்சினர்.
இந்தப் பின்னணியில், அவர்கள் ஒரு குழுவை அமைத்து அரசு எப்படி பொருளாதாரத் தலையீடு செய்ய வேண்டும் என்ற தங்கள் சொந்த விருப்பப் பட்டியலை, பதினைந்து வருடத் திட்டமாகத் தயாரித்து – பம்பாய் திட்டம் – அரசிடம் அளித்தனர். இதில் டாட்டா, பிர்லா, பி. தாக்கூர்தாஸ், ஸ்ரீராம், கஸ்தூரிபாய் லால்பாய் போன்ற பணக்காரத் தொழிலதிபர்கள் கையொப்பம் இட்டனர். நேரு தலைமையிலான இந்திய அரசு பம்பாய் திட்டத்தை வெளிப்படையாக வரவேற்கவில்லை என்றாலும் அந்தத் திட்டத்தின் சாராம்சங்களான கனரக தொழில் உற்பத்தி, பெரும் பாசன வசதி, கட்டுமான வசதி முதலானவற்றை முன்னிலைப் படுத்தியது, நில விநியோகத்தை தவிர்த்தது இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள்.
பாராளுமன்றத்திற்கு உள்ளே
பம்பாய் திட்டம் வெளியில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தது என்றால், காலப் போக்கில் இந்த உறவு ராகுல் பஜாஜ், ராஜீவ் சந்திரசேகர், விஜய் மல்லையா, ஆர்.பி.கோயங்கா, ராஜ்குமார் தூத், லலித் சூரி, விஜய் தார்தா, நவீன் ஜிண்டால், அனில் அம்பானி, அமர்சிங் போன்ற கார்ப்பரேட் பெருமுதலாளிகள், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், குறிப்பாக ராஜ்யசபா உறுப்பினர்களாக, பல பாராளுமன்றக் குழுக்களில் உறுப்பினர்களாகவும் புகுந்து தங்கள் சொந்த நலனுக்காக செல்வாக்கு செலுத்தவதாகத் தொடர்ந்தது.
உச்சம் தொடும் உறவு
குஜராத் மாதிரி வளர்ச்சியின் நாயகன் என்று விளம்பரப் படுத்தப்பட்ட நரேந்திரமோடி குஜராத் முதல்வராகவும் பின்னர் 2014முதல் இந்தியப் பிரதமராகவும் பதவி ஏற்ற காலத்தில், தனிப்பட்ட ஓரிரு கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கும் அவருக்கும் அவர் அரசுக்குமான அகாத உறவு இலை மறைவு காய் மறைவாக இல்லாமல் வெளிப்படையாகவே உச்சம் தொட்டது. இதில் வளர்ச்சி அடைந்தவர்கள் யார்-யார்?
கோவிட் பெருந்தொற்று காலத்தில், முகேஷ் அம்பானி, ஒரு நொடியில் சம்பாதித்த பணத்தை தனித் திறமை ஏதும் இல்லாத ஒரு தொழிலாளி சம்பாதிக்க மூன்று வருடங்கள் ஆகும் என்றும் ஒரு மணி நேரத்தில் அவர் சம்பாதித்ததை சம்பாதிக்க அதே தொழிலாளிக்கு 10,000 ஆண்டுகள் ஆகும் என்று ஆக்ஸ்பாம் அறிக்கை கூறியது.
2014இல் மோடி அரசு பதவியேற்ற போது, அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் 7100 கோடி அமெரிக்க டாலர்கள் (4,33,100 கோடி ரூபாய்) என ஃபோர்ப்ஸ் தெரிவித்தது. இது 2022இல் 20,000 கோடி டாலர்களாக (15,72,220 கோடி ரூபாய்) உயர்ந்தது. சர்வதேச தர வரிசையில், அதானி 2014 இல் மேலிருந்து 609 இல் இருந்தார். ஆனால், வானமே வாயைப் பிளக்கும் வண்ணம் எட்டு வருட மோடி ஆட்சியில் 2022 இல் உலகின் இரண்டாவது பணக்காரராக ஆனார்.
“THE NEXUS” ஆவணப்படம்இந்த அதானி-மோடி “உச்சம் தொட்ட உறவு” எப்படி உருவாகியது, ஊடாடியது, உச்சம் தொடுகிறது என்பதை மிக துணிச்சலுடன் ஆதாரங்களுடன் வெட்ட வெளிச்சமாக்குகிறது “THE NEXUS” என்கிற ஆவணப்படம். இதை வெகு சிறப்பாக தயாரித்துள்ள “காம்ரேட் டாக்கீஸ்” ஊடகம் பாராட்டப் பட வேண்டும்.
கட்டுரையை வாசிக்க : https://bankworkersunity.com/2024/02/03/the-nexus-documentary/
செய்திப்புனல் கட்டுரை: அதானியின் முறைகேடுகளை விளக்கும் The Nexus ஆவணப்படம்
The Nexus ஆவணப்படம் குறித்த் தீக்கதிர் செய்தி
ஆவணப்பட லின்க் : https://www.youtube.com/watch?v=XFAQocI6GoE