கடல் போல – A Life Sketch of a Communist ஆவணப்படம்

திருப்பூர், அக். 9 – “கடல் போல..” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் கே.தங்கவேல் வாழ்க்கை பற்றிய காம்ரேட் டாக்கீஸ் தயாரித்த ஆவணப்படம் திருப்பூரில் வெளியிடப்பட்டது.

தீக்கதிர் செய்தி : சிபிஎம் மூத்த தலைவர் கே.தங்கவேல் ஆவணப்படம் வெளியீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் அந்த ஆவண படத்தை  வெளியிட, திருப்பூர் கட்சியின் மூத்த முன்னோடி தோழர் விழிப்பு எம்.நடராஜன் பெற்றுக்கொண்டார்.

திருப்பூர் அவிநாசி சாலை கருப்பராயன் கோயில் மண்டபத்தில் செவ்வாயன்று நடைபெற்ற இந்நிகழ்விற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி வரவேற்றார்.

தோழர் கே.தங்கவேலின் சீரிய பணிகளை நினைவு கூர்ந்து மூத்த தொழிற்சங்க தலைவர் சு.துரைசாமி, திமுக அவைத்தலைவர் நடராஜன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ரவிச்சந்திரன், மாநகர மேயர் தினேஷ்குமார், அதிமுக பகுதிச் செய லாளர் மு.ஹரிஹரசுதன், கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளர் ரோபோ. ரவிச்சந்திரன், விசிக மாவட்ட செயலாளர் ஏ பி ஆர்.மூர்த்தி, தி.க. மாவட்டத் தலைவர் யாழ். ஆறுச்சாமி, த.பெ.தி.க. மாவட்டச் செயலாளர் சண்.முத்துக்குமார், திராவிடர் விடுதலை கழக தலைவர் முகில் ராசு ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் கே.தங்கவேல் அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். அவரது பண்பை யும், சிறப்பு இயல்புகளையும் அனைவரும் சுட்டிக்காட்டினர். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு, தோழர் கே.தங்கவேல் போன்றவர்கள் வாழ்வும், பணியும் பாடமாக அமையும். அந்த வகையில் நவீன தொழில்நுட்பத்தில் ஆவணப்படம் வெளியிடுவது வரவேற்கத்தக்கது என்று பாராட்டினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன்,  ஆவணப்படம் உருவாக்கத்தில் ஈடுபட்ட மாநிலக் குழு உறுப்பினர் இரா.சிந்தன் ஆகியோர் தங்க வேல் வாழ்வு பற்றியும், இந்த ஆவணப்படத்தை உருவாக்கியது பற்றி, ஆவணப்பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து பேசினர்.

தொழிலாளி வர்க்கம் உருவாக்கிய தலைவர்

நிறைவாக மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் பேசுகையில், தனக்கும், தோழர் தங்கவேலுக்கும் இருந்த நீண்ட கால உறவு பற்றி குறிப்பிட்டார். தொழிலாளி வர்க்கம் உரு வாக்கிய தலைவர் கே.தங்கவேல். 102 வயதுகள் வாழ்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.எஸ். சுப்பிரமணியத்திடமும் உறவு வைத்திருப் பார். மூத்த தமிழ் அறிஞர் பேராசிரியர் சுப்பிரமணி யனிடமும் தொடர்பு வைத்திருந்தார். எத்தகைய முரண்பாடான சூழ்நிலையிலும் அனைத்து கருத்துக்களையும் கவனமுடன் உள்வாங்கிக் கொண்டு, அதில் தேவையான கருத்துக்களை எடுத்துக் கொண்டு, தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் செயல்படக் கூடியவர் தங்கவேல். தனக்குக் கிடைக்கும் அத்தனை புத்தகங்களையும் வாசிக்கக் கூடியவர். பலரிடமும் நட்புடன் உறவுகளை பேணி வந்தார்.

தொழிலாளி வர்க்க தலைவர் என்றால் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே தலைவர் என்ற புரிதல் உள்ளது. தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமின்றி, சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் தலைமை தாங்கும் தலைவராக, உண்மையான தொழிலாளி வர்க்கத் தோழராக தங்கவேல் வாழ்ந்தார் என்றார்.

இந்த நிகழ்வில் தோழர் தங்கவேல் குடும்பத்தினர், அவரது நட்பு வட்டத்தினர், பல்வேறு அரசியல் இயக்கங்களை சார்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் என பெருந்திரளானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வந்து கலந்து கொண்டனர்.

நிறைவாக “கடல் போல….” ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வு முடியும் வரை கலைந்து செல்லாமல் அனைவரும் ஆர்வத்துடன் ஆவணப்படத்தை கண்டு களித்தனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் பி.ஆர். கணேசன் நன்றி கூறினார்.

ஆவணப்பட லின்க் : https://youtu.be/OB57BFwNVZ0?si=QQ151tiu50K-3qfa

More From Author

Two Distant Strangers திரையிடல் & கலந்துரையாடல் நிகழ்ச்சி

விடுதலைக்கு வாழ்வை தந்த தோழர்கள் அனைவருக்கும் “லால் சலாம்” பாடல்